திருஞானசம்பந்தர் தேவாரம் |
முதல் திருமுறை |
1.67 திருப்பழனம் பண் - தக்கேசி |
வேதமோதி வெண்ணூல்பூண்டு வெள்ளையெருதேறிப்
பூதஞ்சூழப் பொலியவருவார் புலியினுரிதோலார்
நாதாஎனவும் நக்காஎனவும் நம்பாஎனநின்று
பாதந்தொழுவார் பாவந்தீர்ப்பார் பழனநகராரே.
|
1 |
கண்மேற்கண்ணுஞ் சடைமேற்பிறையும் உடையார்காலனைப்
புண்ணாறுதிர மெதிராறோடப் பொன்றப்புறந்தாளால்
எண்ணாதுதைத்த எந்தைபெருமான் இமவான்மகளோடும்
பண்ணார்களிவண் டறைபூஞ்சோலைப் பழனநகராரே.
|
2 |
பிறையும்புனலுஞ் சடைமேலுடையார் பறைபோல்விழிகட்பேய்
உறையுமயான மிடமாவுடையார் உலகர்தலைமகன்
அறையும்மலர்கொண் டடியார்பரவி ஆடல்பாடல்செய்
பறையுஞ்சங்கும் பலியுமோவாப் பழனநகராரே.
|
3 |
உரம்மன்னுயர்கோட் டுலறுகூகை யலறுமயானத்தில்
இரவிற்பூதம் பாடஆடி எழிலாரலர்மேலைப்
பிரமன்றலையின் நறவமேற்ற பெம்மானெமையாளும்
பரமன்பகவன் பரமேச்சுவரன் பழனநகராரே.
|
4 |
குலவெஞ்சிலையால் மதில்மூன்றெரித்த கொல்லேறுடையண்ணல்
கலவமயிலுங் குயிலும்பயிலுங் கடல்போற்காவேரி
நலமஞ்சுடைய நறுமாங்கனிகள் குதிகொண்டேதிருந்திப்
பலவின்கனிகள் திரைமுன்சேர்க்கும் பழனநகராரே.
|
5 |
வீளைக்குரலும் விளிசங்கொலியும் விழவின்னொலியோவா
மூளைத்தலைகொண் டடியாரேத்தப் பொடியாமதிளெய்தார்
ஈளைப்படுகில் இலையார்தெங்கின் குலையார்வாழையின்
பாளைக்கமுகின் பழம்வீழ்சோலைப் பழனநகராரே.
|
6 |
பொய்யாமொழியார் முறையாலேத்திப் புகழ்வார்திருமேனி
செய்யார்கரிய மிடற்றார்வெண்ணூல் சேர்ந்தஅகலத்தார்
கையாடலினார் புனலால்மல்கு சடைமேற்பிறையோடும
பையாடரவ முடனேவைத்தார் பழனநகராரே.
|
7 |
மஞ்சோங்குயரம் உடையான்மலையை மாறாயெடுத்தான்றோள்
அஞ்சோடஞ்சும் ஆறநான்கும் அடரவூன்றினார்
நஞ்சார்சுடலைப் பொடிநீறணிந்த நம்பான்வம்பாரும்
பைந்தாமரைகள் கழனிசூழ்ந்த பழனநகராரே.
|
8 |
கடியார்கொன்றைச் சுரம்பின்மாலை கமழ்புன்சடையார்விண்
முடியாப்படிமூ வடியாலுலக முழுதுந்தாவிய
நெடியான்நீள்தா மரைமேலயனும் நேடிக்காணாத
படியார்பொடியா டகலமுடையார் பழனநகராரே.
|
9 |
கண்டான்கழுவா முன்னேயோடிக் கலவைக்கஞ்சியை
உண்டாங்கவர்கள் உரைக்குஞ்சிறுசொல் லோரார்பாராட்ட
வண்டாமரையின் மலர்மேல்நறவ மதுவாய்மிகவுண்டு
பண்டான்கெழும வண்டியாழ்செய்யும் பழனநகராரே.
|
10 |
வேய்முத்தோங்கி விரைமுன்பரக்கும் வேணுபுரந்தன்னுள்
நாவுய்த்தனைய திறலான்மிக்க ஞானசம்பந்தன்
பேசற்கினிய பாடல்பயிலும் பெருமான்பழனத்தை
வாயிற்பொலிந்த மாலைபத்தும் வல்லார்நல்லாரே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |